பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை.

பங்குச் சந்தை நிறுவனங்கள் முதலீடு பெறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்புள்ள இடமாக இருக்கிறது. அதேபோல் முதலீடு செய்ய வேண்டும் என்கின்ற நோக்கம் உடையவர்களுக்கும் பங்குச் சந்தை சிறந்த வாய்ப்பை அளிக்கின்றது.

நல்ல பலன் அளிக்கும்போது பங்குச்சந்தையை விட சிறந்த முதலீடு வேறு எதுவும் இருக்காது என்கின்ற எண்ணம் தோன்றும். அதே சமயத்தில் பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யக் கூடியதாகும்.

உலகில் முதன் முதலில் பங்குச்சந்தையானது நெதர்லாந்தில் உள்ள அம்ஸ்டர்டாமில் 1602 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு கிட்டத்தட்ட 420 ஆண்டுகளாக பங்குச்சந்தை என்கின்ற கருத்து அறிமுகம் ஆகி இருக்கின்றது. இந்தியாவில் பம்பாய் பங்கு சந்தையானது 1875 ஆண்டில் நிறுவப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பங்குச்சந்தை இருக்கின்றது.

ஆரம்பத்தில் பங்குச் சந்தை பற்றிய சரியான விபரம் தெரிந்தவர்களும் படித்தவர்களும் இதில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டினார்கள். தற்பொழுது பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இந்த பங்குச் சந்தை என்றால் என்ன, அதில் எப்பொழுது முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் ஆகியவற்றை நன்கு பகுப்பாய்ந்து பின்னரே முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனமான முதலீடாகும்.

பங்குச்சந்தை பற்றி அதில் சிறந்து விளங்கும் வாரன் பஃபெட் அவர்கள் கூறிய புகழ்பெற்ற வரிகள் இருக்கின்றன. பிறர் பேராசைப்படும்போது நீங்கள் பயத்துடன் இருங்கள், பிறர் பயப்படும்போது நீங்கள் பேராசை கொள்ளுங்கள். ஆமாம் உண்மையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது பயம் மற்றும் பேராசை ஆகியவற்றாலே ஆதிக்கம் செய்யப்படுகிறது.

உண்மையில் பங்குகளின் மதிப்பு குறையும் போது அதை வாங்கியவர்கள் பயம் கொள்வார்கள் ஆனால் குறைந்த மதிப்பிலான பங்குகளை நீங்கள் தற்பொழுது வாங்கும்போது எதிர்காலத்தில் அதன் மதிப்பு அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் நீங்கள் பேராசை கொண்டால் உங்களுக்கு நல்ல பலன் அளிக்கலாம்.

அதுவே அடுத்தவர்கள், பங்குகளின் விலை குறைகின்றது நாம் வாங்கலாமா என்று நினைக்கும் போது நீங்கள் வாங்கிய பங்குகளின்  மதிப்பு அதில் குறைந்திருக்கலாம் அப்பொழுது நீங்கள் பயம் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது

முதலீடு செய்வதற்கு முன் உங்கள் முதலீட்டிற்கான இலக்குகளை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். குறுகிய கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இலக்குகளை நீங்கள் முடிவு செய்த பின்பு முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

பங்குச்சந்தை என்பது நீங்கள் சரியாக முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கலாம் ஆனால் அதிகமான இழப்புகள் பங்குச்சந்தையில் நேரிட வாய்ப்புகள் அதிகம். அதனால் நீங்கள் எவ்வளவு பணத்தை இழந்தால் உங்கள் பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியுமோ அந்த பணத்தை மட்டும் நீங்கள் முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் உங்கள் சேமிப்பு அல்லது பெருந்தொகையை முதலீடு செய்து அந்த பங்குகளின் மதிப்பு குறைந்து விட்டால் உங்கள் முதலீடானது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக நேரிடும். அதனால் நீங்கள் எவ்வளவு பணத்தை இழக்க தயாராக இருக்கிறீர்களோ, எந்த அளவு பணத்தை இழந்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமோ அந்த அளவு பணத்தை மட்டும் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும்.

நீங்கள் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி நன்றாக தெரிந்து கொள்வது அவசியம். அந்த நிறுவனம் எப்பொழுது தொடங்கப்பட்டது, தற்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு என்ன, வருமானம், லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவற்றை பற்றி நன்றாக ஆராய்ந்து கொள்வது அவசியம். அந்த நிறுவனத்தின் முழு வரலாற்றையும் நீங்கள் தெரிந்து கொள்வது உங்களுக்கு அந்த நிறுவனத்தைப் பற்றிய புரிதல் ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் உங்களுடைய மொத்த வருமானம், தற்போதைய சூழ்நிலை, உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை செலவுகள் மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய கடன் போன்றவற்றை பற்றி சிந்தித்து விட்டு பின்பு முதலீடு செய்ய தொடங்கலாம்.

புதிதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து பார்க்கலாம். அதன்பின் பங்குச் சந்தை பற்றிய புரிதல், அது பாதுகாப்பானதா என்பதை பற்றிய தெளிவு உங்களுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் அடுத்தடுத்து முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

எப்பொழுது உங்கள் பங்குகளை நீங்கள் வாங்க வேண்டும் மற்றும் விற்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் நேரத்தை நீங்கள் தீர்மானிக்க கற்றுக் கொள்வது நல்லது. பங்குச்சந்தை பற்றிய விவரங்கள் கொண்ட நிபுணர்கள் உங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களிடம் ஆலோசனை பெறுவதும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.

பல துறைகளில் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டிற்கான இழப்பு என்பது தவிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. உதாரணமாக கல்வி, மருத்துவம், வணிகம், டெக்னாலஜி மற்றும் சுகாதாரம் போன்ற வேறு வேறு துறைகளில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டும் நீங்கள் முதலீடு செய்தால் அந்த துறையின் தற்கால வளர்ச்சி நிலை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உங்கள் பங்குகளின் மதிப்பும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே முதலீடானது பரவலான துறையில் இருப்பது இழப்பை தவிர்க்க உதவக்கூடியது.

சில பொருளாதார நிபுணர்களின் கருத்தின் படிநீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய மொத்த வருமானத்தில் 15 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் அவசர காலத்திற்கு தேவையான பணம் மற்றும் மாதாந்திர செலவுகள் போன்றவற்றிற்கான தொகை ஆகியவற்றை பற்றி சிந்தித்து அதன் பிறகு முதலீடு செய்வது சரியானதாக இருக்கும்.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் அதற்கான காரணங்களை தெரிந்து கொள்வது அவசியம். நிறுவனத்தின் செயல் திறன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதேபோல் முந்தைய காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல் எப்படி இருந்தது, தற்பொழுது உள்ள அரசியல் நிலவரம் மற்றும் சர்வதேச சந்தை இயக்கங்கள் போன்றவை நீங்கள் வாங்கிய பங்குகள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பங்குகளை நீங்கள் வாங்குவதற்கு முன்பும் வாங்கிய பின்னரும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. பங்குச்சந்தையில் குறுகிய கால முதலீடு என்பதை விட நீண்டகால முதலீடு செய்பவர்கள் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. தற்பொழுது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறைய மொபைல் ஆப்புகள் இருக்கின்றன, அதிலேயே நீங்கள் முதலீடு செய்ய முயற்சி செய்யலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை