தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு ஐடியா.

                                                       தெரு நாய்களை கட்டுப்படுத்த முகாம்களை உருவாக்கலாம்.


மக்கள் வரிப்பணத்தில் தான் அரசாங்கம் நடக்கின்றது. மக்களின் வாழ்க்கைக்காக தான் அரசும் அரசு நிர்வாகம் ஆனால் தொடர்ச்சியாக மக்கள் ஒரு விஷயத்தில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்கிறார்களா அல்லது அது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்பது தான் மக்களுக்கு இன்னும் புரியவில்லை.

தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை தாங்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. தெரு நாய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்படும் அதைக் கொல்லக் கூடாது என்று அரசாங்கம் கூறியிருந்தது. பல வருடங்களுக்கு முன்பாக தெரு நாய்களை கட்டுப்படுத்த அதை பிடித்து கொன்று விடுகிறார்கள் என்று சில  விலங்கு நல ஆர்வலர்கள் அதை கொல்லக்கூடாது என்றும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசி போடப்பட்டாலும் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் வருகின்றது. தெரு நாய்களின் எண்ணிக்கையை தடுப்பூசி போடுவதால் கட்டுப்படுத்த முடியாது என்பது தெருநாய்களின் எண்ணிக்கை பெருகி கொண்டு வருவதை வைத்து தெரிகிறது.

சிலர் விலங்குகள் மீது காட்டும் அக்கறை அளவுக்கு மனிதர்கள் மீது காட்டுவதில்லை. தெரு நாய்களால் சின்னஞ்சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் செல்வோர், வாகனத்தில் பயணிப்போர் நாய்கள் குறுக்கே வருவதால் வாகன விபத்துக்கு உள்ளாகின்றனர். மக்கள் நிம்மதியாக நடமாட, சுதந்திரமாக நடை பயிற்சி செய்ய பெரும்பாலான இடங்களில் முடியவில்லை என்பது தான் உண்மை.

இரவு நேரங்களில் நடந்து செல்வோர் நாய்களின் அச்சுறுத்தலால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கின்றனர். நிம்மதியாக இரவு நேரங்களில் புறநகரில் இருப்பவர்கள் நடந்து ஒரு இடத்திற்கு சென்று விடலாம் என்றால் அது முடியாது, சரி இருசக்கர வாகனத்தில் செல்லலாம் என்றாலும் இரவு நேரங்களில் நாய் குறுக்கே வரும் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.

நாய்களுக்காக மனிதர்களை அவதியுறும் ஒரு துரதிஷ்டமான நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது. தமிழக மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் தெருநாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். ஆனால் அரசாங்கத்தில் உள்ளோர் இதனால் பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் சாமானியர்கள் அல்ல, அவர்கள் மிதிவண்டிகளிலும் மோட்டார் வண்டிகளிலும் பயணிப்பதில்லை.

அவர்கள் செல்லும் வாகனம் உயர் ரக வாகனம், அவர்கள் இருக்கும் இடமோ தொல்லைகள் அற்ற இடம், கொசுக்கள் கூட தொல்லை இல்லாத இடத்தில் தான் அரசாங்கத்தை நடத்துபவர்கள், உயர் அதிகாரிகள் முதல் அனைத்து அரசியல்வாதிகளும் வாழ்கின்றார்கள். அதனால் சாமானிய மக்கள் படுகின்ற துன்பத்தை அவர்களால் உணர முடியவில்லை. இதுபோன்ற பிரச்சனையை தெரிந்து அதற்கு நடவடிக்கை எடுக்க அவர்கள் கவனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக நாய் தொல்லையால் நிம்மதி இழந்து வெறுப்புணர்ச்சியுடன் சாலையில் நடத்து, குழந்தைகளை வெளியில் விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டும், நாய்களை விரட்டிக் கொண்டும் வாழ்கிறார்கள். கேரள பகுதிகளில் சில காலம் முன் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு ஒருவர் பாதுகாப்புடன் கையில் கம்புடன் செல்லுகின்ற காட்சிகள் இணைதளத்தில் பரவியது.

இப்படி மக்கள் பல்வேறு விதமாக தெரு நாய்களால் பாதிக்கப்பட்டு தான் வருகிறார்கள். தொடர்ச்சியாக செய்தித்தாள்களில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்கின்ற செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாம் உழைத்து, நாம் வரி செலுத்தி, நாம் நிம்மதி இல்லாமல் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்களின் பிரச்சினைகளை பற்றி அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனையை  கொண்டு செல்பவர்கள் அடிமட்ட நிலையில் இருக்கக்கூடிய பணியாளர்கள் தான். அவர்கள் மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் அவதியுறும் நிலையை எடுத்துச் சென்றால்தான் அதற்கு சரியான தீர்வினை அடைய முடியும்.

இதற்கான சரியான தீர்வு என்று ஒன்று உள்ளது. அதாவது தெரு நாய்களை கட்டுப்படுத்த வட்டார அளவில் ஒரு முகாம் ஒன்றை ஏற்படுத்தலாம். எந்தெந்த பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதோ அந்த பகுதியில் இருக்கக்கூடிய தெரு நாய்கள் அனைத்தையும் அந்த முகாமில் கொண்டு சேர்க்கலாம்.

தடுப்பூசி போடப்பட்டு அந்த முகாமில் சில காலம் அதை பாதுகாப்பதன் மூலம் எதிர்காலத்தில் தெரு நாய்களின் தொல்லை வெகுவாக குறையும். அந்த நாய்கள் இருக்கும் வரை தடுப்பூசி போடப்பட்டு மக்களுக்கு தொல்லை இல்லாமல் குறிப்பிட்ட பகுதியில் வைக்கலாம்.

இதனால் பொதுமக்கள் அவதிவுறாமல் இருப்பார்கள். நாய்களையும் விலங்கு நல ஆர்வலர்கள் விருப்பம் போல் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம். இதற்கான சிறிய முன்னெடுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும், பல கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கும் அரசாங்கம் மக்கள் தொல்லையில்லாமல் வாழவும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், வாகனத்தில் பயணிப்பவர்கள் விபத்து ஏற்படாமல் இருக்கவும் இது நிச்சயம் உதவி செய்யும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை