சங்க காலத்து மன்னனின் வாழ்வில் பறவைகள் செய்த அதிசயம்.


சங்க கால இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு  ஒரு மன்னர் பறவைகளின் மீது கொண்டிருந்த அன்பினை வெளிக்காட்டும் விதமாக ஒரு பாடலை தாங்கிக்கொண்டிருக்கிறது. சங்ககாலத்தில் பறவைகளின் காவலனாய் ஒரு குறுநில மன்னன் வாழ்ந்து வந்தார் அவர் பெயர் ஆய் எயினன்.

அவர் பறவைகளின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். பறவைகளை பாதுகாப்பதில்  அந்த மன்னனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. பறவையையும் இயற்கையையும் ஒரு சிலர் தன்னை மீறிய இயற்கை உணர்வோடு பாதுகாப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு மனிதனாக அந்த குறுநில மன்னர் இருந்து வந்திருக்கிறார்.

 இவர் பறவைகளின் மீது கொண்டிருந்த அன்புக்கும், பறவைகளை இவர் பாதுகாத்ததற்கும் சாட்சியாக வரலாற்றில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு சில மனிதர்கள் வாழும் போது எப்படி வாழ்ந்தார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் சென்ற பிறகு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும். ஒரு சிலர் தன் வாழ்வின் மூலம் தான் யார் என்று காட்டுவார்கள். ஒரு சிலர் தான் வாழ்ந்து சென்ற பின்பு தான் யார் என்பதை இந்த உலகம் அறிய செய்வார்கள் அப்படிப்பட்ட நிகழ்வு தான் அது.

இந்த ஆய் எயினன் என்கின்ற மன்னன் மிஞிலி என்பவனோடு போர் செய்து இறந்து விட்டார். அந்த மன்னன் இறந்த பிறகு பலரும் ஆச்சரியப் படத்தக்க வகையில் ஒரு நிகழ்வு நடந்தது.

அவன் உடல் மீது சூரியனின் வெங்கதிர்கள் படாத வண்ணம் பறவைகள் கூட்டமாக சேர்ந்து பந்தலிட்டு அந்த மன்னனின் உடலை காத்ததாக அகநானூற்று பாடல்கள் கூறுகின்றன. அந்த மன்னன் பறவைகள் மீது எத்தனை அன்பு கொண்டிருந்தால் இப்படி பறவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவன் உடலை பாதுகாத்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

நாம் செய்த தர்மமும் தானமும், நாம் செய்த நன்மைகளும் நமக்கு ஏதோ ஒரு வகையில் வந்து சேரும் என்பதற்கு இந்த பறவைகள் அந்த மன்னன் மீது காட்டிய அன்பே ஒரு உதாரணம். அகநானூற்றில் உள்ள இந்த பாடல் பறவைகள் பந்தலிட்டு அந்த மன்னனின் உடலை பாதுகாப்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது. அகநானூற்றில் பரணர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

 "புள்ளொருங்கு 

அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி

நிழல்செய்து உழறல்"

சிறகரில் கோலி- இறகுகளால் பந்தலிட்டு

உழறல்- சுழன்று கொண்டிருத்தல்

அதாவது வானத்திலிருந்து வரக்கூடிய வெப்பம் மிகுந்த சூரியனின் ஒளி கற்றைகளில் இருந்து அந்த மன்னனின் உடலை பாதுகாக்க பறவைகள் தங்கள் சிறகுகளால் பந்தலிட்டு சுழன்று சுழன்று நிழல் போல மாறியது என்று அகநானூறு பாடல் 208 இல் பரணர் பாடியிருக்கிறார். சங்க காலத்தில் அந்த மன்னன் பறவைகள் மீது எத்தனை பாசம் கொண்டிருப்பான் என்பது தற்பொழுதும் வியப்பாக உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை